தமிழர்களின் வாழ்வியலோடு கலந்த பண்பாட்டு பண்டிகையான ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் தற்போது அருகிச்செல்லும் பண்டிகையாக மாறிவருகின்ற சூழலில் இவ் வருடம் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆடிப்பிறப்பினை பண்டிகையாக கொண்டாடும் மரபு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியான வடக்கு கிழக்கு மண்ணுக்கே உரியது . இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் தமிழர்களால் ஆடிப்பிறப்பு கொண்டாடப்பட்டாலும் வடக்கு கிழக்கு பகுதியில் அதிலும் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழமையாகும். தமிழ் வருடத்தின் நடுப்பகுதி மாதங்களில் ஒன்றான தமிழுக்கு ஆடி முதலாம் நாள் இந்த ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது.
எம் முன்னோர்கள் சூரியனின் வட திசை மற்றும் தென் திசை நோக்கிய வருடத்தின் இருகாலப் பகுதியின் தொடர்புபடும் நாளை கணித்து ஆடிப் பிறப்பு நாளாகக் கொண்டாடி வருகின்றார்கள். சைவ சமயத்தில் இந்த நாள் தேவர்களுடன் தொடர்புபடுத்தி வழிபடப்படுகின்றது. அதாவது தட்சணாயண காலத்தின் தொடக்கதினம் (ஆடிப்பிறப்பு நாள் ) ஆடிமாத முதலாம் நாள் ஆகும். ஆடி பிறந்த பின்னரே விவசாயிகள் பெரும்போகத்துக்காக தயாராகும் விதமாக , நிலத்தை பண்படுதல் ,வாய்க்கால்களை தூர்வாரி துப்பரவாக்குதல் போன்ற பணிகளை தொடங்குவார்கள்.
ஈழத்தில் ஆடிப்பிறப்பு என்றாலே நவாலியூர் சோமசுந்தர புலவர்தான் ஞாபகத்துக்கு வருவார். அவர் இயற்றிய மண்வாசனை கமழும் ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே … என தொடங்கும் பாடல் இந்த பண்டிகையின் சிறப்பையும் தமிழர்களின் வாழ்வியலையும் சிறப்பாக எடுத்து காட்டும் ஒரு நாட்டார் பாடல் ஆகும்.
நவாலியூர் சோமசுந்தர புலவரின் ஆடிப்பிறப்பு பாடல்
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே!கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல் பச்சை அரிசி இடித்துத் தெள்ளி, வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே வேலூரில் சக்கரையுங்கலந்து, தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி வெல்லக் கலவையை உள்ளே இட்டு பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பளே பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி போட்டு மாவுண்டை பயறுமிட்டு மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள் மணக்க மணக வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாஇலை சூடியே குத்து விளக்குக் கொளுத்தி வைத்து அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை ஆடிப் பாடிப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம் கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக் கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தந் தோழர்களே கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!

படங்கள் பற்றிய விளக்கம் :

தமிழ் மக்களின் பண்பாட்டு பெருவிழாவான ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் யாழ்ப்பாணம் அராலி குலனையூர் என்னும் கிராமத்தில் இவ்வருடம் ஆடிப்பிறப்பு நாளான ஜூலை 17 கொண்டாடப்படுள்ளது. அந்த படங்களே இங்கே இணைக்கப்ட்டுள்ளன.
தமிழ் தேசிய பசுமை இயக்கம் எனும் அமைப்பு அராலி வடக்கு குலனையூர் கலைவாணி சனசமூக நிலையத்துடன் இணைந்து இந்த ஆடிப்பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகளை ஒழுங்கமைத்திருந்தார்கள்.
‘‘ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை’’ பாடலுக்கான சின்னஞ்சிறார்களின் ஆடலுடன் ஆடிக்கூழும் கொழுக்கட்டையும் நிகழ்வுக்கு வருகைதந்த எல்லோருக்கும் பரிமாறப்பட்டது.
ஆடிப்பிறப்பு நாளில் ஆடிக்கூழும், கொழுக்கட்டையும் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள் ஆடிப்பிறப்பு நாளை கொண்டாடும் முகமாக வீடுகளில் காய்ச்சி பரிமாறுவது சிறப்பம்சமாகும்.