பயணங்கள் இல்லா வாழ்க்கை எவ்வளவு துரதிர்ஷ்டமானதாக இருக்கக் கூடும். நல்ல வேளை கடவுள் அவ்வளவு கொடியவனாக எம்மை படைத்திடவில்லை இல்லையா?
ஏதேதோ பயணப்பட்ட நீ பேசலாம், பயணங்களுக்கு லீவு ஒதுக்காத நாங்கள் எங்கே போவது போன்ற முணுமுணுப்புக்கள் கேட்காமல் இல்லை…
கொஞ்சம் பொறுமையாக உங்களின் பயணங்களை என்னோடு பயணிப்போம்.
என் பயணத்தின் அளவுகோள்
வீட்டிலிருந்து ஆரம்பிக்கும் பொடிநடைகளில் ஆரம்பிக்கிறது. நடைகளை விரும்பிய நாம் “பயணக் காதலர்கள்” ஆகின்றோம். இப்போது என் கண்களின் வழியாக நம் பயணங்களைத் தொடர்வோம் வாருங்கள்.
தினமும் ஓரே பாதை வழி பாடசாலை சென்றாலும், நித்தமும் அது ஒரு புதுப்பயணம். அதே சாலையில் பூப்பறிக்கும் பாட்டிக்கு எட்டாத பூக்களுக்கு ஏணி நான். பாட்டிக்காகவே கண்ணில் பட்ட பூக்களை பறித்து சென்ற நாட்களுக்கு புன்னகையோடு கொஞ்சல்கள் இலவசம். பரீட்சை நாட்களிலும் என் காலைகளை அழகாக்கும் அவரின் அந்த மந்திரப் புன்னகை.
அதே நடைப்பயணம் மாலை வேறு பயணிகளை அறிமுகப்படுத்தும். வியர்வை, சலிப்பு எல்லாம் கடந்து சிரிப்பு மட்டுமே ஒலித்தபடி சலசலத்த வீதிகளில், வெற்றிகள் மட்டும் அன்றி, தோல்விகளும் சிரிப்போடு பகிரப்பட்டு துவளாமல் எழுந்த கதைகள் ஏராளம். தோல்விகளை இயல்பாக கடக்க பழக்கப்படுத்தியது, அந்த பயணங்களும் பயணிகளும். மீள நினைத்து என்னோடு நீங்களும் புன்னகைத்தீர்கள். நம் பயணங்களின் காட்சிகள் மாறின, மாறாதது புன்னகை அல்லவா?
பள்ளியோடு பட்டம் பெற்று நம் பயணங்களும் பட்டதாரிகளாயின. உயர் கல்வியோ தொழிலோ கொஞ்சம் நீண்ட பயணங்களும், நீண்ட சிந்தனைகளும்
ஆட்கொள்ளும் தருணங்கள்.
வளர்ச்சியின் கனவுகளுக்கும், வாழ்க்கையின் தொடக்கத்திற்கும், எத்தனையோ திட்டங்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் போது
காதில் ஓடும் பாடலுக்கும் , பெயர் தெரிந்து கொள்ளாமலே தினமும் சிரிக்கும் சக பயணிக்கும், தெரியாமலே பிடித்த இடமாய் மாறிப் போன பின்னிருக்கை ஜன்னலோரத்திற்கும் ஏதோ ஒரு வகையில் கடமைப்பட்டுள்ளோம் இல்லையா?
ஏதோ வகையில் ஆறுதலையும் சிரிப்பையும் தந்து விட்டுச் சென்றதற்கு.
எத்தனையோ சுமையான தருணங்களை கண் சிமிட்டும் நேரத்தில் சுகமாக்கியது பயணங்கள்.
எத்தனை பெயர் தெரியாத பயணத்தோழர்களைக் கடந்திருப்போம் இதுவரை?
ரயில் ஸ்நேகங்களோடு, பஸ் ஸ்நேகங்கள் முதல், புக்கிங் அப் ஸ்நேகங்கள் வரை.
நேரத்திற்கு போய் சேருமா என்ற போது குலுங்கி நின்ற பேருந்தை கூப்பிடாமலே ஓடிச் சென்ற தள்ளிய நண்பர்களுக்கு நாங்கள் சிரித்த புன்னகையே போதுமானதாக இருந்தது.
தெரியாத இடத்தில் ரயில் தடம்புரண்ட போது, ஊர் பேர் கேட்காமல் பகிரப்பட்ட தண்ணீர் போத்தலுகளுக்குப் பின்னால் புன்னகைகள் தலையாட்டின.
எல்லாத் தலைகளும்
தொலைப்பேசிக்குள் புதையல் தேட, நானும் முன்னால் இருந்த குழந்தையும் சைகையாலே நட்பாகி அவள் கையில் இருந்த ஓரே மிட்டாயை கொடுக்கும் அளவிற்கு நட்பானொம். பயணம் எனும் மந்திரத்தால்.
யார் எவர் என்று அறியாத என்னிடம், இருக்கை பகிர்ந்த காரணத்தால் அந்த நடுத்தர வயதுக்காரர் உரைத்த அவரின் காதல் கதை, அத்தனை உணர்வையும் கடத்திச் சென்றது . இன்று என்னுள் கதையாக வளர்கிறது. பெயரறியாத அவர், “மிச்சத்தை அடுத்த பயணத்தில் தொடர்வோம்” என்று சிரித்த சிரிப்பை நல்ல புகைப்படமாக சேமித்து வைத்திருக்கிறேன் கைப்பேசியில்.
புக்கிங் ஆப் ஆட்டோவில், படபடப்போடு வேலைத்தேர்வுக்கு போகும் போது, “சீக்கிரமா போகனும், முதல் இன்டவியூ” னு சொன்னதும், இறங்கும் போது வாழ்த்து சொல்லி, பதட்டத்தில் தவற விட்ட புத்தகத்தோடு ஓடி வந்து திருப்பிக் கொடுத்த ஆட்டோ அண்ணாவிற்கு, சிரிப்போடு நன்றியும், “ஆப்” பில் ஐந்து நட்சத்திரங்களையும் சிரித்தப்படி தட்டிவிடுகின்றேன்.
இப்படி என்னைப்போல், உங்கள் பயணங்கள் போல் அச்சிடப்படாத பல கதைகள் பேசிச் சிரிக்கின்றன இந்த பயணங்கள். நினைக்கும் ஒவ்வொரு தருணங்களிலும் நமக்கு சிரிப்பை தந்துவிடவும் தவறுவதில்லை.
பயணங்கள் எனும் எம் புன்னகைத் தோழன்.